வீறு கொண்டு எழுவோம் ! வேலை நிறுத்த களம் நோக்கி !
கடுகி வரும் உலக மயம்
தொழிலை விற்று காசாக்கும் தனியார் மயம்
பெட்டிக்குள்ளே அடங்குகின்ற கணினி மயம்
உலக வங்கி அடுக்குகளில் வட்டி மயம்
பருத்திக் காட்டில் நட, மலட்டு விதை மயம்
சந்தையில் வேற்று நாட்டாரின் பொருள் மயம்
நூறு கோடி மடங்குகளில் கடன் வாங்கி நாடெங்கும் கடன் மயம் !
தாராளமயத்தின் தலைவிரி கோலம்-
உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில்
இந்தியர்கள் எண்ணிக்கை முப்பது என்று !
'BT' விதையால் பட்டினிச் சாவோ
'விதர்பா' 'தெலுங்கானாவில்'
முப்பதாயிரம் பேர் என்று !
இது தானே இந்தியக் கணக்கு ?
அரியணை மயக்கத்தில் அரசியல் வாதிகள்
திரை மயக்கத்தில் இளைஞர்கள்
சின்னத் திரையில் தாய்மார்கள்
பட்டி மன்றத்திலோ பகட் டாளர்கள்
இரவைத் தொலைத்த 'IT' படிப்பாளர்கள்
சாலையோரத்தில் வேலையற்ற வீணர்கள்
பசி மயக்கத்தில் அடித்தட்டு உழைப்பாளர்கள்
எங்கே போனது எங்கள் இந்தியா ?
உருப்படாமல் செய்துவிட்டது உலகமயம் !
விவசாயத்தில் வைத்த கொள்ளி ' மான்சாண்டோ '
சில்லறை வர்த்தகத்தில் கொள்ளி ' வால்மார்ட்டும்' ' ரிலையன்ஸ்'உம்
மின்சாரத்தில் வைத்த கொள்ளி ' என்ரான் '
அணுசக்தியிலோ அதன் பெயர் 'ஸ்டெரிலைட்'
குளிர் பானத்தில் வைத்த கொள்ளி ' பெப்சி - கோக்'
அஞ்சலில் வைத்த கொள்ளி " மெக்கென்சி "
அடுத்தவர்கள் வீடு எரிய நாம் பார்த்த "கொள்ளி"
இன்று நம் அடுப்படியில் .
தொலைத் தொடர்புத் துறை தொலைந்து போய் நாளாச்சு
2G யில் விற்று முதல் சேர்ந்தாச்சு
BSNL துறையிருந்தும் தனியார் மயம் ஆயாச்சு
அஞ்சலுக்கும் அந்த கதி வந்தாச்சு
பென்சனும் கூட அன்னியர் கை போயாச்சு
ஊரே சேர்ந்து போராட - நீ ஒதுங்கி நின்றால்
உன் துறையில் போராட யார் வருவார் ?
இதுவெல்லாம் "கம்யூனிசப் போராட்டம்" என்று
கதைக்கின்ற "கோயபல்ஸ்" இங்கு உண்டு
அப்படியானால் வணிகர் சங்க 'வெள்ளையன்' கம்யூனிஸ்டா ?
'வைகோ'வும் 'நெடுமாறனும்' கூட கம்யூனிஸ்டா ?
அடிக்கடி அன்னியர் மய ஆபத்து என்று எழுதும்
'ஆனந்த விகடன் ' கம்யூனிஸ்டா?
'இந்துவும்' 'தினமணியும்' என்ன
"தீக்கதிரும்' ' ஜனசக்தியுமா? "
'92 இல் தேசத் துரோக வேலை நிறுத்தம் என்று எழுதிய
பத்திரிகைகள் - அன்று
2012 இல் தேச பக்தியாய் போராட பத்திகள் பல எழுதும்
பத்திரிகைகள் - இன்று
இதைத்தானே விடாமல்
சொன்னோம் நாம் - நின்று
மீண்டும் ஒரு சுதந்திரப் போர் - அதன்
துவக்கத்தில் நாம்
வீரபாண்டிய கட்ட பொம்மனாய்
வீறு கொண்டு எழுவோம்
"எட்டப்பனாய்" இருந்து இழி சொல்
பெறமாட்டோம்
"சிப்பாய்க் கலகம்" போல
இதுவும் ஒரு படியே - ' தண்டி ' யாத்திரையும்
'ஜாலியன் வாலாபாக் ' கும் போல இனி உண்டு
மீண்டும் சுதந்திரப் போராட்டம் அன்னியரை எதிர்த்து !
வீறு கொள்வோம் - வேலை நிறுத்தக்
களம் நோக்கி எழுவோம்! 28.2.இல் சரித்திரம் படைப்போம்!
போராட்ட வாழ்த்துக்களுடன்
J.R. மாநிலச் செயலர் .
(மேலே கண்ட உரையில் ஒரு வரியில் சிறு மாற்றம் - உரையின் நோக்கம் அனைத்து தோழமை உள்ளங்களையும் போராட்ட களம் நோக்கி ஈர்த்திடவே அன்றி , எவர் மனதையும் புண் படுத்த அல்ல என்பதே )
(மேலே கண்ட உரையில் ஒரு வரியில் சிறு மாற்றம் - உரையின் நோக்கம் அனைத்து தோழமை உள்ளங்களையும் போராட்ட களம் நோக்கி ஈர்த்திடவே அன்றி , எவர் மனதையும் புண் படுத்த அல்ல என்பதே )
NFPE GPO
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.