மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் போராட்டம் மாபெரும் வெற்றி !
அண்ணா சாலை தபால் அலுவலக வாயிலில் ஆயிரக்கணக்கில் திரண்ட மத்திய அரசு ஊழியர்கள் !
தலையா ? கடல் அலையா ? என்று எண்ணும் வண்ணம் ஊழியர் கூட்டம் !
30 ஆண்டுகளுக்குப் பிறகு மிகப் பெரிய மத்திய அரசு ஊழியர் போராட்டம்
இது என தலைவர்கள் மகிழ்ச்சி !
வரலாறு படைத்தது இந்த தார்ணா போராட்டம் !
தமிழகம் அனைத்து மாநிலங்களுக்கும்
ஓர் எடுத்துக்காட்டு !
முன்னோடி மாநிலமாகத் திகழ்வது தமிழ்நாடு !
மாபொதுச் செயலாளர் பெருமிதம் !
மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் தமிழ்மாநிலக் குழுவின் சார்பில் கடந்த 18.11.2014 அன்று சென்னை தபால் துறை தலைவர் (O/O CPMG, TN ) அலுவலக வாயிலில் மாபெரும் தார்ணா போராட்டம் நடைபெற்றது. மகா சம்மேளனத்தின் மூன்றாவது கட்ட போராட்டம் இது. 12 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய அளவில் அனைத்து மாநிலத் தலைநகரங்களிலும் இந்தப் போராட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக சென்னையிலும் இந்தப் போராட்டம் நடைபெற்றது.
1.1.2014 முதல் ஊதியக்குழுவின் பலன்களை அனைத்து மத்திய அரசு , GDS மற்றும் ஓய்வூதியர்களுக்கும் அளிக்க வேண்டும், இடைக்கால நிவாரணம் அளிக்க வேண்டும், பஞ்சப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைக்க வேண்டும் , தபால் துறையில் பணிபுரியும் 265000 GDS ஊழியர்களையும் ஊதியக்குழு வரம்புக்குள் கொண்டுவர வேண்டும், புதிய பென்ஷன் திட்டம் ரத்து செய்யப் படவேண்டும், கருணை அடிப்படையில் வழங்கப்படும் வேலை வாய்ப்புகள் எந்தவித நிபந்தனையும் இன்றி முழுமையாக வழங்கப் பட வேண்டும், அனைத்து காலிப் பணியிடங்களையும் உடன் நிரப்பிட வேண்டும் , CASUAL ,MAZDOOR CONTINGENT , PART TIME ஊழியர்களுக்கு 1.1.2006 முதல் ஆறாவது ஊதியக் குழுவின் அடிப்படையில் உயர் ஊதியம் வழங்கிட வேண்டும் , அவர்களை பணி நிரந்தரம் செய்திட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக நடத்தப்படும் போராட்டம் இது.
இந்த தார்ணா போராட்டத்திற்கு மகா சம்மேளனத்தின் மாநிலத் தலைவர் தோழர். J . இராமமூர்த்தி அவர்கள் தலைமை தாங்கினார். மாநிலப் பொருளாளர் தோழர் S . சுந்தரமூர்த்தி அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.
இந்த போராட்டத்தை வாழ்த்தியும் விளக்கியும் மகா சம்மேளனத்தின் மா பொதுச் செயலாளர் தோழர். M . கிருஷ்ணன் அவர்கள் நீண்ட உரையாற்றினார் . அடுத்த கட்டமாக எதிர்வரும் 11.12.2014 அன்று டெல்லியில் நடைபெற உள்ள ரயில்வே , பாதுகாப்புத்துறை உள்ளிட்ட அனைத்து மத்திய அரசு ஊழியர் சங்கங்களின் JCM NATIONAL COUNCIL தலைவர்கள் அடங்கிய கூட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவிக்க முடிவெடுக்கப்படும் என்று கூறினார்.
தொடர்ந்து தமிழ் மாநில மகா சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் தோழர். M . துரைபாண்டியன் அவர்கள் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். அவரைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் தோழர். பாலசுப்ரமணியன், அஞ்சல் மூன்றின் முன்னாள் பொதுச் செயலாளர் தோழர். K .V .ஸ்ரீதரன் ஆகியோர் வாழ்த்திப் பேசினார். கூட்டத்தில் அனைத்திந்திய அஞ்சல் RMS ஓய்வூதியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் தோழர். K . ராகவேந்திரன் அவர்களும் கலந்துகொண்டார். சாஸ்திரி பவன் மத்திய அரசு ஊழியர் சங்கங்களின் கன்வீனர் தோழர். சாம்ராஜ் அவர்கள் நன்றி உரையுடன் தாரணா போராட்டம் இனிதே நிறைவுற்றது.
போராட்டத்தில் ஆயிரக்கணக்கில் அஞ்சல் , RMS , வருமான வரித்துறை, AG அலுவலகம், சாஸ்திரி பவன் மத்திய அரசு ஊழியர் சங்கங்கள் , ராஜாஜி பவன் மத்திய அரசு ஊழியர் சங்கங்கள் , கல்பாக்கம் அணுமின் நிலைய ஊழியர் சங்கங்கள், CGHS ஊழியர் சங்கங்கள் , GOVT FORMS & PRINTING பகுதி ஊழியர் சங்கங்கள், மத்திய கலால் மற்றும் சுங்க வரித்துறை ஊழியர் சங்கங்கள் , புள்ளியியல் துறை உள்ளிட்ட அனைத்து மத்திய அரசு ஊழியர் சங்கங்களின் தோழர்கள் கலந்துகொண்டனர். அண்ணா சாலை தலைமை அலுவலக , CPMG அலுவலக வளாகம் நிரம்பி வழிந்தது இதுவே முதல் முறையாகும்.
இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட அனைத்து தலைவர்களுக்கும் , தோழர், தோழியர்களுக்கும், கோட்ட/ கிளைச் செயலர்களுக்கும் தமிழ் மாநில மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் சார்பில் நெஞ்சார்ந்த
நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். கோரிக்கைகளை வென்றெ டுக்க அடுத்த கட்ட போராட்டத்திற்கு நாம் தயாராவோம் !
தார்ணா போராட்டத்தில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை கீழே பார்க்கலாம் :-
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.